Saturday 15 October 2011

மிரட்டும் மூல நோய்.. விரட்ட வழிகள்

மூல நோய் பாதித்தவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காதது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் கேன்சராக மாறலாம் என்றும் எச்சரிக்கிறார். அவர் கூறியதாவது: ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம். 

மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும்.

முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போல புண் ஏற்பட்டு ஆறாமல் தொந்தரவு செய்யும். அதில் இருந்து ரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது. இதில் ஏற்படும் கொப்பளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம். 

பாதுகாப்பு முறை: நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. கேரட் ஜூஸ் தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு குடித்தால் ஓரளவு தீர்வு காணலாம். அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும்.                  

ரெசிபி

கருணைக்கிழங்கு குழம்பு: கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும். 

வெந்தயக் கீரை கட்லட்: கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. 

பூண்டு சாதம்: பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

டயட்

உணவுதான் மூலத்துக்கு தீர்வு. தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும். முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும். சில்லி சிக்கன், சில்லி மீன் என எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம். சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. 

பாட்டி வைத்தியம்

அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும். 

அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும். 

அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். 

ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும். 

ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும். 

ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும். 

அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.

ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். 

இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம். 

இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும். 

இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys