Saturday 15 October 2011

டென்ஷனுக்கு ‘நோ’ சொல்வது எப்படி?

பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு வழி சொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள். 

அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும். டென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும். 

அடுத்து, உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தக் குறைபாடு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். தடுக்காமல் விட்டால் மன அழுத்தமாக மாறிவிடும். அப்படி ஆகும் போது உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும். வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். 

டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம். குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். 

இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் உள்ளிட்டவைகளை தடுக்கலாம். இந்த வயதில் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம். 

நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்ற பழக்கங்களின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். தேவையற்ற விஷயங்களை மனதில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் நல்ல சிந்தனைகளுக்கு மனதில் இடம் கிடைக்கும். 30 வயதுக்கு மேல் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தவும். வாக்கிங் நல்ல பலன் அளிக்கும். மது, புகைபிடித்தல் போன்ற பழக்கங்களால் டென்ஷன் குறையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை. இது போன்ற பழக்கங்களை கைவிடுவது அவசியம். சரியான நேரத்துக்கு தூங்கும் பழக்கம் மனஅமைதிக்கு நல்லது.

ஆரம்பத்தில் டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள் விரைவில் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். ஆஸ்துமா, இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள், நாள்பட்ட வலி ஆகியவை மனநலப் பிரச்னைகளின் தீவிரத்தை அதிகரிக்கும். உடலில் நோய்கள் குடியேறுவதற்கான சாவியே டென்ஷன் தான். டென்ஷன் என்ற சாவியை தொலைத்தால் நிம்மதியான, நோயற்ற வாழ்வு வாழ முடியும். 

பாட்டி வைத்தியம்

உடல் பருமனை குறைக்க வேளைக்கீரையுடன் பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிடலாம். டென்ஷனுக்கு உடல் பருமனும் ஒரு காரணம். 

ரத்தசோகை காரணமாக டென்ஷன் ஏற்படலாம். இதற்கு வெறும் வயிற்றில் வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்தி கொள்ளலாம். 

மலை வேப்பம்பூவில் கஷாயம் வைத்து குடித்தால் டென்ஷன் தலைவலி குணமாகும். 

பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 

வில்வ இலையை மென்று தின்று தேன் குடித்தால் மன அழுத்த பாதிப்புகள் குணமாகும். 

தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

ருத்ராட்சம், வல்லாரை இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும் ஒரு கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிடுவதன் மூலம் மறதியால் உண்டாகும் டென்ஷனை தடுக்கலாம். 

முளைக் கீரை தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். 

முட்டைக்கோசுடன் வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உடல் எடை குறையும். 

முடக்கத்தான் கீரைச்சாற்றில் உளுந்து, கருப்பு எள் இரண்டையும் சம அளவில் ஊற வைத்து, உலர்த்தி பொடி செய்து இரண்டு ஸ்பூன் அள வுக்கு எடுத்து சின்ன வெங்கா யம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும். இதனால், உடல் வலிமை பெறுவதோடு, டென் ஷனும் குறையும்.

ரெசிபி

ஆலு மசாலா: சின்னச் சின்ன உருளைக் கிழங்குகளாக அரை கிலோ எடுத்துக் கொள்ளவும். தக்காளி 2, வரமிளகாய் 4, சீரகம் ஒரு டீஸ்பூன், பட்டை கிராம்பு 4, பூண்டு 2 பல், பெரிய வெங்காயம் 1, ஏலக்காய் 2 எடுத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை முழுதாக வேக வைத்து உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளி தவிர மற்ற மசாலாப் பொருட்கள் அனைத்தையும் வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த கலவையை ஊற்றி, வேகவைத்த உருளைக்கிழங்கு போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஆலுமசாலா ரெடி.

மிக்சட் புரூட் சாலட்: கருப்பு திராட்சை, பேரிக்காய், அன்னாசி, ஆப்பிள், கொய்யா, மாம்பழம் ஆகிய பழ வகைகளை ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். சுத்தமாக உரித்து கட் செய்து அதன் மீது எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு விட்டு கலந்து சாப்பிடவும். சர்க்கரை, பால் எதுவும் சேர்க்க வேண்டாம். இது போன்ற பழக்கலவையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் மனம் புத்துணர்ச்சி அடையும். 


வெஜிடபிள் ராகி அடை: ராகி மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். கேரட், முட்டைக்கோஸ், பெரியவெங்காயம், பீன்ஸ், பீட்ரூட் ஆகிய காய்களை துருவி வைத்துக் கொள்ளவும். சீரகத்தூள் ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன், இஞ்சி தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். கருவேப்பிலை, கொத்தமல்லி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அனைத்தையும் ராகி மாவில் போட்டு தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்னர் அடையாக சுட்டு சாப்பிடலாம். 

டயட்

டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான உணவு முறை இவை இரண்டும் டென்ஷனுக்கு முக்கிய காரணமாக உள்ளது. சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு, உடல் எடை கூடுவது மற்றும் ரத்த கொதிப்பு, இளம்வயதில் ஹார்ட் அட்டாக் என பல நோய்களின் கூடாரமாக உடல் மாறுகிறது. 

உடலில் பிரச்னைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. சிறு வயது முதல் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலடாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிப்பதற்கு தடா போடவும். பர்கர், பீசா மற்றும் ஜங்க் புட் வகைகளை தவிர்க்கவும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys