Wednesday 5 October 2011

கல்லீரலில் டெங்கு, கேன்சருக்கு சூப்பர் மருந்து சுறா !


சுறாக்களின் கல்லீரலில் உள்ள ரசாயன மூலப்பொருளில் இருந்து மனிதனின் பல நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்பட உள்ளது. இந்த ரசாயன பொருள், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது என்பதால் இதை பயன்படுத்தி ஆன்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சி மருத்துவர்கள்.
இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் பெரிய புரட்சி என்றும் மனித சமுதாயத்துக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் வர்ணிக்கின்றனர். புதிய மருந்தை கொண்டு விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் எதிர்பார்த்த வெற்றி கிட்டியுள்ளது. வாஷிங்டனில் உள்ள, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மைக்கேல் ஸாஸ்லோஃப் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இந்த அரிய தகவல் வெளிப்பட்டுள்ளது. 
ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் வருமாறு:
சுறா மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் ரசாயன மூலப்பொருளில் மனிதர்களை தாக்கும் டெங்கு மற்றும் கல்லீரல் பாதிப்புகள், கண் பாதிப்பு, ஹெபடைடிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை வகைகளான பி மற்றும் டி பாதிப்புகளுக்கு எளிய நிவாரணம் கிடைக்கும். இதுவரை இத்தகைய நோய்களுக்கு ஸ்குவாலாமைன் என்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. சுறாவின் கல்லீரலில், ஸ்குவாலாமைனில் உள்ள மூலப்பொருட்களைவிட பன்மடங்கு பலன்தரும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது. இதனால் நோய்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும். புற்றுநோய் மற்றும் பல்வேறு கண் பாதிப்புகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
மஞ்சள் காமாலை மற்றும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் கல்லீரல் செயல்பாட்டை பாதித்து புற்றுநோய்க்கு காரணமாகிறது. கல்லீரல் செயல்பாட்டை முடக்கி உயிருக்கு உலை வைக்கும் ஆபத்தும் அதிகம். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்து, இத்தகைய பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்பது மனித குலத்துக்கே ஆறுதலான விஷயம். இதுகுறித்து தொடர் ஆய்வு நடந்து வருகிறது. இதில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys