Wednesday 5 October 2011

ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கு சிறுநீரகம் செயலிழப்பு !


இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கும் சிறுநீரகங்கள் செயலிழக்கிறது. ஆனால், தானமாக 5 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது.
மனிதன் உயிருடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறுநீரகம் முக்கிய பங்கு வகுக்கிறது. அந்த சிறுநீரகம் செயலிழந்து விட்டால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும். உடலில் சேரும் கழிவு பொருட்களை எடுத்து வரும் ரத்தத்தை சுத்தப்படுத்தி, அதில் இருக்கும் கழிவுநீரை சிறுநீராக வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. உடலில் உள்ள நீர்ப்பகுதியின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பது, எலும்புகளை வலிமைபடுத்துவது, ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை தூண்டுவது, ரத்த அழுத்தத்தை சீராக வைப்பது என பல வேலைகளை சிறுநீரகம் செய்கிறது.
இந்தியாவில் சிறுநீரக நோய்களினால் 7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 1.5 லட்சம் பேருக்கு சிறுநீரகம் செயலிழக்கிறது. ஆனால், உறவினர்கள் மற்றும் மற்றவர்களின் மூலமாக சுமார் 5 ஆயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே தானமாக கிடைக்கிறது. இதனால், சிறுநீரகம் கிடைக்காமல் பலர் உயிரிழந்து வருகின்றனர். உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டும் போதாது, உடல் உறுப்புகளை எப்படி பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான், உறுப்புகள் செயலிழப்பதை தடுக்க முடியும். உடல் உறுப்புகள் மாற்று திட்ட ஒருங்கிணைப்பாளர் அமலோற்பவநாதன் கூறியதாவது:
உடலில் முக்கிய உறுப்பான சிறுநீரகம் செயலிழப்பு தற்போது அதிகரித்து வருகிறது. சிறுநீரகம் செயலிழப்புக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்புதான் (பி.பி) முக்கிய காரணம். இந்த இரண்டையும் சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர புகை, மது மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளானவர்கள், உயிர்கொல்லி மருந்து, வலி நிவாரண மாத்திரைகள் அதிக உட்கொள்பவர்களுக்கு சிறுநீரகம் செயலிழக்கிறது. சிறுநீரகம் செயலிழப்பதே பலருக்கு தெரிவதில்லை. உடல் உறுப்புகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிகுறிகள்
உடல் தளர்ந்து காணப்படும். முகம், கை, கால்கள் வீங்கும். சிறுநீர் வெளியேறுவது தடைப்படும். மூச்சுத்திணறல் இருமல், விக்கல் ஏற்படும். பசியின்மை, தோல் வறண்டு போகும். சர்க்கரை நோயாளிகள் என்றால் உடல் சோர்வாக இருக்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறும். மயக்கம், தலை சுற்றுதல் வரும். மன அழுத்தம் அதிகரிக்கும்.
தானமாக கிடைப்பது 5 ஆயிரம்
தமிழகத்தில் 500 பேருக்கு அவசியம்
இந்தியாவிலேயே தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் சிறப்பாக செயல்படுகிறது. உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. அப்படி இருந்தும், சிறுநீரகம் தேவை என 500 பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாமல் பலர் இருக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys