Saturday 15 October 2011

மஞ்சள் காமாலை தடுக்க வழிகள்!

மஞ்சள் காமாலை ஆபத்தான நோய். சரியான நேரத்தில் கண்டு பிடித்து முறையான சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் ஆளையே கொன்று விடும். கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்தம் மற்றும் உடலுறவு மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: நம் நாட்டில் பெரும்பாலும் ‘கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ’ என்ற வைரசின் தாக்கம்தான் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும். சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழைகிறது. ரத்தம் செலுத்தும் போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்புள்ளது. 

இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்படும். கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரத்தப் பரிசோதனையின் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். மேலும் கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்திருக்கும். ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் காமாலை என்று தெரிந்த உடன் முறையான சிகிச்சை மற்றும் பத்தியம் மேற்கொள்வது அவசியம். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். 

கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு கல்லீரல் அழற்சி பி வைரசால் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டியது முக்கியம். வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும். 

பாதுகாப்பு முறை

மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் வெட்டவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். 

சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும். ஈக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர், பால் போன்றவற்றை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு குடிக்கலாம். கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை தவிர்க்க வேண்டியதும் அவசியம். நோய் முற்றிலும் குணமடையும் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

ரெசிபி

ரவா கிச்சடி: வெள்ளை ரவை - 400 கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 2, நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக் கோஸ் மற்றும் பச்சைப் பட்டாணி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை வதக்கவும். இதில் உப்பு, சிறிது தண்ணீர், காய்கறிகள் சேர்த்து வேகவிடவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து கொதித்த பின்னர் ரவை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

உருளைக் கிழங்கு சப்பாத்தி: உருளைக் கிழங்கை வேக வைத்து எடுத்து ஒன்றிரண்டாக மசித்து கொள்ளவும். இதில் சிறிதளவு மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயப் பொடி, தண்ணீர் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். பின்னர் சிறிய சப்பாத்திகள் செய்து அதன் இடையில் உருளைக்கிழங்கு ஸ்டப் செய்து பின்னர் சப்பாத்தியை அரிசி மாவில் பிரட்டி தோசைக்கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும். 

சேமியா பிரியாணி: ஒரு பாக்கெட் சேமியா எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் 2, தக்காளி 2, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் 4, திக்கான தேங்காய்ப்பால், நறுக்கிய முட்டைக் கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் 1 கப், காளான் 2 கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகளை சேர்த்து வேக விடவும். சேமியாவை சுடு தண்ணீரில் போட்டு வடிகட்டி எடுத்துக் சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும். பின்னர் ஒரு விசில் விட்டு இறக்கவும்.

டயட்

மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் மற் றும் மண்ணீரலில் ஏற்படும் பாதிப்பு. வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. பிறந்த குழந்தைக்கும் மஞ்சள் காமாலை வர வாய்ப்புள்ளது. அது சில நாட்களில் சரியாகி விடும். கல்லீரல், மண்ணீரலோடு மற்ற உறுப்புகளும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பசி எடுக்காது, கடுமையான காய்ச்சல் இருக்கும். சிறு நீர் வெளியேறுவதில் பிரச்னை மற்றும் சிறுநீர் மஞ்சளாக வெளியேறுதல், கண் மற்றும் உடல் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும். 

மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சமையலில் அதிக எண் ணெய் பயன்படுத்தக் கூடாது. மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் எடுக்கக் கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும். அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் விலக்கி வைக்கவும். மாவுச் சத்து உள்ள உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். தினமும் 3 இளநீர் குடிக்க வேண்டும். மோர், முட்டையின் வெள்ளைக் கரு தினமும் சாப்பிடலாம். காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.

பாட்டி வைத்தியம்

காலையில் வெறும் வயிற்றில் 30 மிலி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் நோய்கள் குணமாகும். 

சுக்காங்கீரை ஒரு கைப்பிடி, சீரகம் 20, சிறிய வெங்காயம் 1, எலுமிச்சை சாறு சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு குணமாகும். 

செலரிக் கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் பலவீனம் தீரும். 

துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய் களை தடுக்கலாம்.

நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம் இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

நொச்சி இலைகளை நன்றாக அரைத்து சாப்பிட்டால் ஈரல் வீக்கம் குணமாகும். 

பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும். 

பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளையும் குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும். 

பொன்னாங்கண்ணிக் கீரையைப் பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டால் கல்லீரல் நோய் குணமாகும்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys