Saturday 15 October 2011

மேக்கப்


பார்ட்டிக்கு போகாத இளம் பெண்களை இன்று விரல் விடாமலே எண்ணி விடலாம். இதற்கென ஸ்பெஷல் தயாரிப்புகளுக்கும் மெனக்கெடுகிறார்கள். ஒவ்வொரு முறை பார்ட்டிக்கு போகும் போதும், பியூட்டி பார்லர் போய் மேக்கப் செய்து கொள்வது எல்லாருக்கும் சரிப்படாது. ‘‘பார்ட்டி மேக்கப் ஒண்ணும் பிரமாதமான விஷயமே இல்லை. அவங்கவங்களே ஈஸியா போட்டுக்கலாம்’’ என்கிற அழகுக் கலை நிபுணர் மேனகா, எப்படிப் போடுவது என்றும் கற்றுத் தருகிறார்.

‘‘எந்த விதமான மேக்கப் போடறதுக்கு முன்னாடியும் கவனிக்க வேண்டிய விஷயம் அவங்களோட சருமத்தோட தன்மை. வறண்ட சருமமா இருந்தா, மேக்கப் போடறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி ‘க்ளோ பேக்’ போட்டு, 15 நிமிஷங்கள் அப்படியே விட்டுக் கழுவணும். அதுக்கு மேல மாயிச்சரைசர் தடவி, 3 நிமிஷங்கள் விட்டா, சருமத்தோட வறட்சி மாறி, பட்டு மாதிரி மென்மையாகும்.
இதுவே எண்ணெய் பசை சருமமா இருந்தா, க்ளோ பேக்குக்கு பதிலா ஸ்கின் டோனர் உபயோகிக்கணும். மாயிச்சரைசர் தேவையில்லை. காம்பினேஷன் சருமம் உள்ளவங்களுக்கு சில இடங்கள்ல சருமம் வறண்டும், சில இடங்கள்ல எண்ணெய் பசையோடவும் இருக்கும். அந்தந்த இடத்துக்கேத்தபடி ரெண்டையும் உபயோகிக்கலாம்.

அடுத்தது ஃபவுண்டேஷன். வறண்ட சருமத்துக்கு கிரீம் வடிவிலான ஃபவுண்டேஷனும், எண்ணெய் வழியற சருமத்துக்கு கேக் வடிவிலானதும் பொருந்தும். 
ஃபவுண்டேஷன், எப்போதும் சருமத்தோட அதே கலர்ல இருக்க வேண்டியது முக்கியம். ஃபவுண்டேஷன் போடறப்ப எப்பவுமே முகத்துக்கு மட்டும் போடாம, காதுகள், கழுத்து, முதுகுப் பகுதிக்கும் போடணும்.

ஃபவுண்டேஷன் போட்டதும், அதுக்கு மேல ஐஸ் கட்டிகளால ஒத்தி எடுக்கணும். நம்மூர் வெயிலுக்கு எப்பேர்பட்ட மேக்கப்பும் உருகி வழியும். ஐஸ் கட்டி ஒத்தடம் தந்த பிறகு மேக்கப் போட்டா, எத்தனை மணி நேரமானாலும் மேக்கப் வழியாது.அடுத்ததா கண் மேக்கப். பெரிய கண்களா இருந்தா, கீழ் பகுதில மட்டும் காஜல் போட்டா போதும். மேலயும் போட்டா, கண்கள் இன்னும் பெரிசா தெரியும். அதுவே சின்ன கண்களுக்கு மேல, கீழே ரெண்டுலயும் காஜலும், ஐ லைனரும் போடலாம்.

புருவங்கள் சரியான வடிவத்துல இருக்க வேண்டியது மேக்கப்ல ரொம்ப முக்கியம். புருவங்களுக்கு கீழே ஹைலைட்டர் யூஸ் பண்ணலாம். அதுக்குக் கீழே உடைக்கு மேட்ச்சா ஐ ஷேடோ போடலாம். புருவங்களுக்கு ஐ ப்ரோ பென்சில் யூஸ் பண்றவங்க, கருப்பு கலரை தவிர்த்து, பிரவுன் பென்சில் உபயோகிச்சா, இயற்கையா தெரியும். 

கண் இமைகள் பெரிசா இருக்கிறவங்க, வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா போட்டாலே போதும். அப்படியில்லாதவங்க, செயற்கை இமைகள் கிடைக்குது. அதையும் ஒட்டிக்கலாம்.அப்புறம் மூக்கு... அகலமான மூக்கு இருந்தா, ‘நோஸ் கட்டிங்’ பண்ணி சரியாக்கலாம். டார்க் கலர் ஃபவுண்டேஷனை மூக்கோட அகலமான ரெண்டு பகுதிலயும் ரொம்ப லைட்டா தடவிட்டு, நடுவுல மட்டும் லைட் ஷேடு தடவலாம். கன்னங்கள் பெரிசா, அகலமா இருந்தாலும், இதே டெக்னிக்ல சரியாக்கலாம். கன்னங்களோட எலும்புப் பகுதில பிளஷர் உபயோகிக்கலாம். பகல் நேரத்துல மேட் ஃபினிஷ் பிளஷரும், சாயந்திர நேர பார்ட்டிக்கு பளபளக்கிற கிளிட்டர் பிளஷரும் பொருத்தமா இருக்கும்.

கடைசியா உதடுகள்... ஃபவுண்டேஷன் போடறப்பவே உதடுகளுக்கும் சேர்த்துப் போடணும். அதுக்குப் பிறகு நமக்கு வேண்டிய வடிவத்துல லிப் பென்சிலால உதடுகளுக்கு அவுட் லைன் வரையலாம். இப்ப நிறைய கலர்ல லிப் பென்சில் கிடைக்குது. இது மூலமா பெரிய உதடுகளை சின்னதாகவும், சின்ன உதடுகளைப் பெரிசாவும் காட்டலாம். அதுக்கு மேல லிப்ஸ்டிக் போட்டு, டிஷ்யூ பேப்பரால துடைச்சு எடுத்துட்டு, ரொம்ப கம்மியா லிப் கிளாஸ் 
தடவலாம். ரெண்டு, மூணு கலர் கலந்து லிப்ஸ்டிக் போட்டா கூடுதல் கவர்ச்சியா இருக்கும்.

என்னதான் லேட்டா பார்ட்டி முடிச்சிட்டு வந்தாலும், மேக்கப்பை கலைக்க அலுத்துக்கிட்டு, அப்படியே தூங்கக் கூடாது. இது சருமத்தை சுவாசிக்க விடாமச் செய்துடும். வெறுமனே சோப் போட்டுக் கழுவறதும் கூடாது. கிளென்சிங் மில்க் வச்சு, ஈர பஞ்சால துடைச்சு எடுத்துட்டு, அப்புறம் ஃபேஸ் வாஷ் உபயோகிச்சு, ரெண்டு, மூணு முறை முகம் கழுவிட்டுதான் தூங்கப் போகணும்...’’ என்கிறார் மேனகா. 

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | free samples without surveys